மச்சு பிக்ச்சு தொல்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 13, 2012

வரலாற்றுச் சிறப்பு மிக்க மச்சு பிக்ச்சு நகரில் இருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்கத் தொல்லியலாளரால் எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா பெருவிடம் மீள ஒப்படைத்துள்ளது.


மச்சு பிக்ச்சுவின் அமைவிடம்
மச்சு பிக்ச்சு

35,000 இற்கும் அதிகமான கடைசித் தொகுதி தொல்பொருட்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து விமானம் மூலம் பெருவின் குஸ்க்கோ நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது.


1911 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் இராம் பிங்கம் என்பவர் மச்சு பிக்ச்சுவை அதிகாரபூர்வமாகக் கண்டுபிடித்ததன் பின்னர் அவர் அங்கிருந்த பல தொல்பொருட்களை கடனாகப் பெற்றுச் சென்றிருந்தார் என பெரு கூறி வந்தது. இராம் பிங்கின் கண்டுபிடிப்பை அடுத்தே மச்சு பிக்ச்சு நகரம் உலகப் புகழ் பெற்றது.


2008 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பெரு அரசு வழக்குப் பதிவு செய்திருந்தது. இதனை அடுத்து யேல் பல்கலைக்கழகத்திற்கும் பெரு அரசுக்கும் இடையில் 2010 ஆம் ஆண்டு நவம்பரில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


அமெரிக்க தொல்லியலாளர் பிங்கம் மட்பாண்டங்கள், மனித எச்சங்கள், மற்றும் உலோகத் துண்டுகள் உட்பட 46,000 தொல்பொருட்களை அங்கிருந்து எடுத்துச் சென்றார். கடந்த ஆண்டு முதல் இரண்டு தொகுதி பொருட்களை யேல் பல்கலைக்கழகம் திரும்ப ஒப்படைத்திருந்தது.


மீள ஒப்படைக்கப்பட்ட பொருட்களில் இருந்து சிறந்த தொல்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு குஸ்கோ நகரில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.


மச்சு பிச்சு கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம். பொதுவாக "இன்காக்களின் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. ஆண்டு தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று வருகின்றனர்.


மூலம்[தொகு]