உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க தமிழக அரசு தீர்மானம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 16, 2011

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அணையின் நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பதிலடியாகவே தமிழக முதல்வர் ஜெயலலிதா இது குறித்த தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ஏற்று, அந்த அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006 ஆம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு(திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் கூறுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் அணையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


குறிப்பிட்ட அந்தச் சட்டத்துக்கு எதிரான மனு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று, உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் கேரள மக்களிடையே பீதியை கிளப்பி, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த வாரம் ஒரு தீர்மானத்தை இயற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அது சரியானது அல்ல என்கிற காரணத்தால், அந்தத் தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தை தெரிவிப்பது எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் தெரிவிக்கிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]