உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 14, 2011

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த இடதுசாரிக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நடுவண் ரயில்வே அமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்கிறார்.


மமதா பானர்ஜி

34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்து வந்த மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது முதல் முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளது. மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யவே தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த 1977ல், காங்கிரசின் சித்தார்த் சங்கர் ராய், முதல்வராக பதவி வகித்தார். அதற்கு பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்தது மேற்கு வங்கம். 1977 முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஜோதி பாசு முதல்வராகப் பதவியில் இருந்தார். அவருக்குப் பின், கடந்த பத்தாண்டுகளாக, கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா, முதல்வராக இருந்து வருகிறார்.


இம்முறைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் - தேசிய காங்கிரஸ், மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. திரிணமுல் கட்சி, 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டியிட்டன.


ஆறு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.


மேற்கு வங்க அரசியலில், இந்த வெற்றி, மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இடதுசாரி கூட்டணியில் அமைச்சர்களாக இருந்த, பெரும்பாலானோர் தோல்வியைத் தழுவினர். கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி சந்தித்ததையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் புத்ததேவ் பட்டாச்சார்ஜி. அவர் போட்டியிட்ட ஜாதவ்பூர் தொகுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார்.


தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில், "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னை, இந்தப் புனித மண், மனிதர்கள் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த நாளை, மேற்கு வங்க மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளுக்காக, மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காத்திருந்தனர்' என்றார்.


தோல்வி குறித்து இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் கூறுகையில், "இந்த முடிவு எதிர்பாராதது. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இடதுசாரி கட்சிகள் செயல்படும். தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கப்படும்' என்றார்.


மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் பானர்ஜிக்குக் கிடைக்கவுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]