உள்ளடக்கத்துக்குச் செல்

ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-18 விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 2, 2010

இரசியாவின் விண்கலம் ஒன்று பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை கசக்ஸ்தானில் உள்ள இரசிய ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.


படிமம்:Soyuz-TMA-18-Mission-Patch.png
சோயுஸ் வீரர்கள்: டிரேசி டைசன், ஸ்குவோர்த்சொவ், கர்னியென்க்கோ

நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி ஏவப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சோயுஸ் டிஎம்ஏ-18 என்ற இந்த விண்கலம் ஏவப்படுவது குறிப்பிடத்தக்கது.


நாசாவின் டிரேசி டைசன், மற்றும் இரசியாவின் அலெக்சாண்டர் ஸ்குவோர்த்சொவ், மிக்கைல் கர்னியென்க்கோ ஆகிய விண்வெளி வீரர்கள் இன்று புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் சென்றிருக்கிறார்கள். இவ்விண்கலம் இரண்டு நாட்களில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என நாசா தெரிவித்துள்ளது.


திங்கட்கிழமை அன்று டிஸ்கவரி விண்ணோடம் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அன்று சோயுஸ் விண்வெளி வீரர்களுடன் இணைய இருக்கிறது.


முதன் முதலில் 1967 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட சோயுஸ் விண்வெளித் திட்டத்தில் டிஎம்ஏ-18 105வது மனிதப் பயணம் ஆகும். இன்று விண்ணுக்குச் சென்றுள்ள மூவரும் பூமியச் சுற்றிக் கொண்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் வரை தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பூமியை கிட்டத்தட்ட 250 மைல்கள் உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தின் அமைப்புப் பணிகள் 90 விழுக்காடு அளவு முடிவடைந்து விட்டதெனவும், இன்னும் ஓராண்டில் முழுமையடைந்து விடும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

மூலம்