லங்கா பத்திரிகை ஆசிரியர் கைது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 30, 2010


கொழும்பில் இருந்து வெளியாகும் "லங்கா" என்ற சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த என்பவர் நேற்றுக் காலை இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார். அத்துடன் அப்பத்திரிகையின் நுகேகொடை காரியாலயமும் காவல்துறையினரால் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.


எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன கட்சி சார்பு செய்தித்தாளான “லங்கா”வில் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை எழுதப்பட்ட கட்டுரை ஒன்று தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.


இந்தக்கட்டுரை தொடர்பாக நேற்றுக் காலை சிறிமல்வத்தவிடம், குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலத்தை பெற்றிருந்தனர் என்றும் இந்த நிலையிலேயே இன்று மாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜேவிபி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில், தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களைக் கைது செய்வது, மற்றும் அவர்களைத் துன்புறுத்துவது போன்ற சேயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என பாரிசில் இருந்து இயங்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) என்ற அமைப்பு அதிபர் பகிந்த ராஜபக்சவை கேட்டுக் கொண்டுள்ளது. பொதுத்தேர்தல் ஒன்றின் முன்னரோ அல்லது பின்னாடியோ செய்தியாளர்கள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிடுவது வழக்காமான நடைமுறை என்றும், இதனைக் கருத்தில் கொண்டு தேர்தலின் பின்னர் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கையாள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்து, அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.


கடந்த புதனன்று மகிந்த ராஜபக்ச அரசுத் தலைவராக இரண்டாம் முறையாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது ஊடக அடக்குமுறை இதுவாகும் என ஊடகத்தரப்புகள் தெரிவித்துள்ளன.

மூலம்