லிபியாவுக்கு எதிராக ஐநா பொருளாதாரத் தடை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 27, 2011

லிபியாவில் இடம்பெற்றுவரும் மக்கள் எழுச்சியை அடக்கிவரும் முவம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை ஐநாவின் பாதுகாப்புச் சபை ஏகமனதாகக் கொண்டுவந்துள்ளது.


ஆயுதத் தடை, மற்றும் சொத்துக்களை முடக்குவது போன்றவற்றுடன், முவம்மர் கடாபியை மனிதநேயத்திற்கு எதிராகச் செயற்பட்டமைக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது போன்ற அம்சங்கள் ஐநா உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


லிபியத் தலைவர் உடனடியாக பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா தெரிவித்தூள்ளார்.


தலைநகர் திரிப்பொலியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கடாபி, நாட்டின் கிழக்குப் பகுதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடாபிக்கு எதிரான இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் பணியில் எழுச்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக கடாபியின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்தெல்-ஜலீல் என்பவர் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது பதவியைத் துறந்துள்ளார். இராணுவம் மற்றும் பொதுத்துறை சார்ந்தவர்களைக் கொண்ட அமைப்பு அடுத்த மூன்று மாதத்துக்குள் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆலோசனைகள் எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ஐநாவுக்கான லிபியாவின் தூதர்கள் இந்த யோசனைக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.


கடந்த 10 நாட்களாக இடம்பெற்றுவரும் மக்கள் எழுச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடாபியின் ஆதரவாளர்களால் அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]