உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொன்சேகா வாக்களிக்கவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 26, 2010


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்படாததால் இன்றைய அரசுத் தலைவர் தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியவில்லை.


கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொண்ட போதும் தனக்குரிய வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அப்போது அவர் இராணுவத் தளபதியாக இருந்ததால், இராணுவத் தலைமையகத்தில் தனது வாக்கைப் பதிந்திருந்தார்.


தான் சிறிலங்காவின் பிரஜை என்றும் அதனால்தான் தான் சிறிலங்காவின் இராணுவ தளபதியாகவும் படைகளின் பிரதானியாகவும் பதவி வகித்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சகல தகுதியும் உடையவர் என்று தெரிவித்துள்ள சிறிலங்கா அரசமைப்பின் 31 ஆவது சரத்தின் பிரகாரம் தனக்கு அந்த உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தான் இன்றைய தேர்தலில் வாக்களிக்காததை கூறி தனக்கெதிராக அரசுத்தரப்பு மேற்கொள்ளும் பிரசாரத்தை நம்பாமல் அனைத்து மக்களும் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


இதே வேளையில், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டியதில்லை எனவும், அவர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


பொன்சேகா அமெரிக்கப் பிரசையாக இருப்பதால் அவருக்கு இங்கு வாக்களிக்கும் தகுதி இல்லை எனவும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாதெனவும் அரசு ஊடகங்கள் முன்னதாக அறிவித்திருந்தன.


மூலம்