உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 6, 2010


2007 ஆம் ஆண்டில் ஈராக்கின் பக்தாத் நகரில் அமெரிக்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் குறித்த காணொளியை ”விக்கிகசிவுகள்” (Wikileaks) என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.


விக்கிகசிவுகளின் சின்னம்

சூலை 2007 இல் அமெரிக்க ராணுவ அப்பாச்சி உலங்குவானூர்தி ஈராக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆயுதமற்ற பொதுமக்களை தீவிரவாதிகள் எனக் கருதி சுட்டுக்கொன்றது. இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த புகைப்படக் கருவிகள் மற்றும் உபகரணங்களை ஏகே47 வகைத் துப்பாக்கிகள் என்று தவறாக கணக்கிட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.


அப்பாச்சியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் காணொளியை விக்கிகசிவுகள் என்கிற தளம் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட காணொளியை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க அரசிடம் கோரி வந்தது. இம்முயற்சி பயனளிக்காத நேரத்தில் இந்த காணொளி கசிந்துள்ளது.


முதல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை எடுத்துச்செல்வதற்காக வந்த வாகனத்தையும் தவறாக கணக்கிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுவர், சிறுமி படுகாயமடைந்தனர். பாலகர்கள் படுகாயம் பற்றி ராணுவ வீரர் கூறும் போது போர் செய்யும் இடத்திற்கு அவர்களை அழைத்துவந்தது தவறு என்று கூறுகிறார்.


இந்தக் காணொளியை யார் தமக்குத் தந்தது என்பதை விக்கிகசிவுகள் இணையத்தளம் வெளியிட மறுத்து விட்டது.


விக்கிகசிவுகள் இணையத்தளம் தகவல் சுதந்திரம் குறித்து போராடி வருகிறது. வெளியுலகிற்குக் கசிந்த தகவல்களை அது இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இக்காணொளி பற்றி பெண்டகன் இதுவரை எந்தப் பதிலும் தரவில்லை.

மூலம்

[தொகு]