வெள்ளைக்கொடி வழக்கு: சரத் பொன்சேகாவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, நவம்பர் 19, 2011

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5000 ரூபா அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.


வடக்கில் இறுதிக்கட்டப் போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


பொன்சேகாவிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது.


நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நிராகரித்த சரத்பொன்சேகா, தன்னை அரசியலில் இருக்க விடாமல் தடுக்கின்ற நோக்கத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்நிலையில் தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக பொன்சேகாவின் வழக்கறிஞர் நலின் லத்துவஹெட்டி தெரிவித்துள்ளார்.


இராணுவத்துக்காக தளபாடங்கள் கொள்வனவு செய்தபோது முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று இராணுவ நீதிமன்றம் முடிவு செய்ததை அடுத்து ஏற்கனவே முப்பது மாத கால சிறைவாசத்தை அவர் அனுபவித்து வருகிறார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Bookmark-new.svg