உள்ளடக்கத்துக்குச் செல்

12,000 ஆண்டுகள் பழமையான முழுமையான மனித எலும்புக்கூடு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 19, 2012

இலங்கையின் தெற்கே களுத்துறை மாவட்டத்தில் பாஹியங்கலை என்னும் இடத்திலுள்ள பாகைன் குகை தொல்லியல் அகழ்வாய்வுப் பகுதியிலிருந்து 12,000 ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் பலாங்கொடை மனிதன் என அழைக்கப்படும் ஆதி மனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை தொல்லியல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


பாகியங்கலை குகையின் முன்னே ஆதி மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டும் ஓவியம்

கண்டெடுக்கப்பட்ட எலும்பிலிருந்து கரிம மாதிரிகளைப் பிரித்தெடுத்து மேலதிக நுண்ணிய ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, இந்த எலும்புக்கூட்டின் வயது துல்லியமாகக் கண்டறியப்படும் எனத் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


"எமது எதிர்கால ஆராய்ச்சிக்கு இது மிக முக்கியமானது, இதன் மூலம் வரலாற்றுக்கு முந்திய கால மனிதன் பற்றித் தெரியாத உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்," என தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் தசநாயக்க தெரிவித்தார். இந்த இடத்திலிருந்து சில கற்கருவிகளையும், உணவு சம்பந்தமான எச்சங்களையும் தாங்கள் தோண்டி எடுத்துள்ளதாக அகழ்வாய்வுப் பணிகளின் இயக்குநர் கலாநிதி நிமல் பெரேரா பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.


இதற்கு முன்னரும் அம்பலாந்தோட்டை, ஹங்கம பகுதிகளில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது, ஆனாலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது ஒரு முழுமையான எலும்புக்கூடு ஆகும் என இலங்கை தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மூலம்

[தொகு]