2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 9, 2011

2010 ஆண்டில் புதுதில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்ததில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக பொதுநலவாய விளையாட்டுக் கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.


மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் நேற்று இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுக் கூட்டமைப்பின் ஒழுங்காற்றுக் குழு அமர்வில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேசிய இளவரசரும் கூட்டமைப்பின் பிரதித் தலைவருமான துங்கு இம்ரான் தலைமையில் இக்குழு கூடியது.


கடந்த வருடம் புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் குத்துச்சண்டைப்போட்டியில் மஞ்சு வன்னியாராச்சி தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.


கடந்த ஆண்டு மஞ்சு வன்னியாராச்சி 56 கிலோகிராம் எடைக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வேல்ஸ் நாட்டின் சோன் மெக்கோல்ட்ரிக் என்பவரை வீழ்த்தி சுமார் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார். ஆனால் தடைசெய்யப்பட்ட நன்ட்ரோலின் எனும் ஊக்கமருந்தை உட்கொண்டதால் அவர் பதக்கத்தை இழந்துள்ளார்.


மஞ்சு வன்னியராய்ச்சிக்கு விளையாட்டுகளுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுகளை பொறுத்து, இரண்டாம் இடத்தை பெற்ற வேல்ஸ் நாட்டின் ஷான் மெக்கோல்ட்ரிக்குக்கு வழங்கப்படும் எனவும் அந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டு போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக இடம் பெற்ற சோதனையில், மஞ்சு வன்னியராய்ச்சி ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரிய வந்ததை அடுத்து, அவரிடமிருந்து பதக்கத்தை இலங்கை ஒலிம்பிக் சங்கம் திரும்பப் பெற்றது. சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்பாட்டை தடுக்கும் அமைப்பான வாடாவின் தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துகளின் பட்டியலில் உள்ள நாண்ட்ரோலின் எனும் மருந்தின் ஒரு வடிவான 19-நொராண்ட்ரோஸ்டிரோன், மஞ்சு வன்னியராய்ச்சியின் சிறுநீரில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கைக்கு ஒரே ஒரு தங்கப் பதக்கமே கிடைத்திருந்தது.


1995, 1996, 2004, 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் மூன்று தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் மஞ்சு வன்னியாராட்சி பெற்றுள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]