இலங்கையின் அரசுத் தலைவர் தேர்தல் ஆரம்பமாகியது
செவ்வாய், சனவரி 26, 2010
இலங்கையின் அதிபர் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது அதிபர் தேர்தல் இதுவாகும். இதுவரை கொழும்பில் அதிகளவானோர் ஆர்வத்துடன் வாக்களிக்கச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, யாழ்ப்பாணம், நவாலி, மானிப்பாய், நல்லூர் மற்றும் கோண்டாவில் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிபர் மகிந்த ராஜபக்ச இம்முறை கடும் போட்டியை முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகாவிடம் இருந்து எதிர்பார்க்கிறார் என கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
14 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளார்கள். 11,000 வாக்களிக்கும் மையங்கள் உள்ளூர் நேரம் 0700 மணிக்கு (0130 ஜிஎம்டி) திறக்கப்பட்டன. வாக்களிப்பு நிலையங்கள் மாலை 1600 மணிக்கு மூடப்படும்.
1900 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுதல் ஆரம்பமாகும். புதன்கிழமை காலையில் முடிவுகள் வெளிவரும் என தேர்தல் ஆணையாளர் முன்னர் தெரிவித்திருந்தார்.
22 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் எந்த வாக்காளரும் 50% வாக்குகள் பெறாவிட்டால், விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, ஆகக்கூடிய வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
தொடர்பான செய்திகள்
[தொகு]மூலம்
[தொகு]- Historic polls underway டெய்லி மிரர், சனவரி 26, 2010
- "Sri Lanka votes to elect new president". பிபிசி, சனவரி 26, 2010