உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பில் எதிர்க்கட்சி ஆதரவாளர் வீட்டில் குண்டுவீச்சு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 22, 2010

அரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவரின் வீடு குண்டுவீச்சுக்கு இலக்காகியுள்ளது.


இக்குண்டுவீச்சில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் டிரான் அலெஸ் என்பவரின் வீடு மற்றும் அவரது வாகனம் ஆகியன பலத்த சேதத்துக்குள்ளாயின. எனினும் அலெசும் அவரது குடும்பமும் காயமெதுவுமின்றி உயிர்தப்பினர்.


வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


சனவரி 26 ஆம் நாள் இடம்பெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னோடியாக வன்முறைகள் அங்கு அதிகமாக இடம்பெறுவதையிட்டு ஐநா பொதுச் செயலர் பான் கி மூனும் ஐரோப்பிய ஒன்றியமும் இவ்வார ஆரம்பத்தில் கவலை வெளியிட்டிருந்தனர்.


குறைந்தது நான்கு பேர் கடந்த வாரங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் அரசு ஆதரவாளர்கள் என்றும் ஏனையோர் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


கடந்த 20 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் இம்முறையே வன்முறைகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

மூலம்

[தொகு]