உள்ளடக்கத்துக்குச் செல்

தென் கொரியக் கடற்படைக் கப்பல் வட கொரிய கடற்பரப்பில் மூழ்கியது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 27, 2010

தென் கொரியக் கடற்படைக் கப்பல் ஒன்று ஏறத்தாழ 100 கடற்படையினருடன் வட கொரியாவுடனான சர்ச்சக்குரிய எல்லைப்புறக் கடற்பரப்பில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 58 பேர் இது வரையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 46 பேர் காணாமல் போயுள்ளனர். வட கொரியாவின் தாக்குதல் படகொன்றின் மூலம் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வடக்கு எல்லைக்கோடு சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டுள்ளது

1,200 தொன் எடையுள்ள இக்கப்பல் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:30 இற்கும் 10:45 இற்கும் இடையில் பைங்கியொங் தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியது. கப்பல் மூழ்கியதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. வட கொரியா இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மஞ்சள் கடலில் 3 முதல் 5 பாகை செல்சியஸ் வெப்பநிலையுள்ள கடலில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக உயிருடன் இருப்பது அபூர்வம் என கடற்பட அதிகார்ரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே காணாமல் போன 46 பேரையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.


கப்பலில் பின்புறம் ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், கப்பலின் இயந்திரம் உடனடியாகவே செயலற்றுப் போனதாகவும், அதன் பின்னர் கப்பல் வேகமாக மூழ்க ஆரம்பித்ததாகவும் தென் கொரியாவின் யொன்காப் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பல மாலுமிகள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்துள்ளனர்.


1950 முதல் 1953 வரை நிகழ்ந்த கொரியப் போரை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்த வண்னம் உள்ளது. கொரியப் போருக்குப் பின்னர் மஞ்சள் கடல் பகுதியில் இது வரையில் மூன்று பெரும் சண்டைகள் நிகழ்ந்துள்ளன.

மூலம்

[தொகு]