உள்ளடக்கத்துக்குச் செல்

ரசியாவின் தாகெஸ்தானில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 9 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 31, 2010

இரசியாவின் வடக்கு கவ்க்காசு மாநிலமான தாகெஸ்தானில் இன்று இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் ஒரு உயர் காவல்துறை அதிகாரி உட்பட குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.


ரஷ்யாவின் கவ்க்காஸ் பகுதி

கிசிலியார் என்ற நகரில் மாநில உள்ளூராட்சி அமைச்சு அலுவலகத்துக்கு முன்னால் இன்று காலை 0830 மணியளவில் கார் குண்டு ஒன்று வெடித்தது. அதே தெருவில் 35 நிமிடங்களுக்குப் பின்னர் இரண்டாவது குண்டு வெடித்தது.


இரசியாவின் தலைநகர் மாஸ்கோவில் சென்ற திங்கட்கிழமை 39 பேர் கொல்லப்படக் காரணமான இரண்டு தற்கொலைக் குண்டுவெடிப்புகளை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தன் மத்தியில் இன்றைய குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.


வடக்கு கவ்க்காஸ் மாநிலங்களின் நிலைகொண்டுள்ள தீவிரவாதிகளே இக்குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் என அவதானிகள் கருதுகின்றனர்.


செச்சினியாவில் தீவிரவாதிகளுக்கெதிராக நடைபெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளை அடுத்து அப்பகுதிகளில் பெரும் நெருக்கடி நிலை நீடிக்கிறது. கடந்த ஆண்டு சூன் மாதத்தில் உள்ளூராட்சி அமைச்சர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.


இன்றைய இரண்டாவது தாக்குதலில் கிஸ்லியார் நகரக் காவல்துறைத் தலைவர் கேர்ணல் வித்தாலி வெதர்னிக்கொவ் எனபவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கிஸ்லியார் நகரம் செச்சினிய எல்லைக்கு அண்மையாக அமைந்துள்ளது.

மூலம்

[தொகு]