தெற்கு சூடானில் இராணுவத்தினர் மீது தாக்குதல், 16 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 11, 2011

தெற்கு சூடானில் இராணுவத்தினர் மீது போராளிகள் தாக்கியதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதை அடுத்து போர் நிறுத்தம் மீரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜொங்கிளெய் மாநிலத்தில் ஃபாங்காக் நகரில் இரண்டு இராணுவ வாகனங்கள் மீது ஜோர்ஜ் ஆத்தரிற்கு ஆதரவான போராளிகள் இத்தாக்குதலை நடத்தினர். 4 இராணுவத்தினரும் 12 போராளிகளும் தாக்குதலில் இறந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனாலும், மேலும் பலர் இறந்திருக்கலாம் என அவர் கூறினார். ஜொங்கிளெய் தெற்கு சூடானில் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் ஆகும்.


தெற்கு சூடானின் ஆளும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவத்தின் (SPLA) இராணுவப் பிரிவான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) உறுப்பினராக இருந்தவர் ஜோர்ஜ் ஆத்தர். ஆனாலும், கடந்த ஆண்டில் இடம்பெற்ற மாநிலத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தமது இயக்கத்தின் மீது குற்றம் சாட்டி ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தார். கடந்த மாதம் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருந்தார்.


வடக்கு சூடானில் இருந்து பிரிவதற்கு தெற்கு சூடான் ஆயத்தமாகும் தறுவாயில் இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. கடந்த மாதம் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 98% தெற்கு சூடானியர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


நேற்று வியாழன் மாலையில் ஃபாங்காக் பகுதியில் சண்டை ஆரம்பமானதாகவும், ஆனாலும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவம் (SPLA) திரும்பத்தாக்கியதில், போராளிகள் பின்வாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜோர்ஜ் ஆத்தர் ஆயுதம் ஏந்திப் போராட விளைந்த வேளையில், வடக்கு சூடான் அவரைத் தூண்டி விட்டதாக அப்போது தெற்கு சூடானில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பொது வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எஸ்பிஎல்ஏ உடன் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டார். ஆனாலும், போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வில் ஆத்தர் கலந்து கொள்ளவில்லை.


"மற்றைய தரப்பு ஏற்றுக் கொண்டால் நாம் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்த விரும்புகிறோம், அப்படி இல்லையெனில், அமைதி உடன்பாடு உடனடியாக முடிவுக்கு வந்து விடும்," என ஆத்தர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.


தெற்கு சூடான் தற்போது உள்நாட்டிலேயே பெரும் சவாலை எதிர்நோக்குவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தெற்கு சூடானில் நேற்று ஆரம்பமாகிய புதிய மோதல்கள் குறித்து தமது கவலையை ஐநாவின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்ஸ்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பொது வாக்கெடுப்பின் முடிவுகளைத் தாம் மதிப்பதாக சூடானிய அரசுத்தலைவர் ஒமார் அல்-பஷீர் உறுதியளித்துள்ளார். தெற்கு சூடானின் விடுதலையை அங்கீகரித்ததற்குப் ”பரிசாக” பஷீர் மீதான பன்னாட்டு நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணைகள் திரும்பப்பெறப்பட வேண்டும் என சூடானின் ஐநா பிரதிநிதி கடந்த புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார். சூடானின் மேற்குப் பகுதியான தார்ஃபூரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக பஷீர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]