உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்து அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 11, 2010

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் அரசுப் படையினருக்கும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பகுதி ஒன்றை மீளக் கைப்பற்ற அரசுப் படைகள் முயன்ற போதே நேற்று சனிக்கிழமை அன்று பெரும் சண்டை மூண்டது. இறந்தவர்களில் 4 படையினரும் அடங்குவர்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளாலும், ரப்பர் குண்டுகளாலும் தாக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை படையினர் மீது வீசினர்.


துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதென்பதை அரசுப் பேச்சாளர் பனித்தன் வட்டநாயகம் மறுத்துள்ளார்.


தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்களான சிவப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு மாத காலமாக அரசாங்க எதிர்ப்புப் பேரணிகளை தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் நடத்தி வருகின்றனர்.


பாங்கொக்கில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை புறக்கணித்து வருகின்றனர்.


பாங்கொக் வணிக வட்டாரம், ராணுவத் தளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆர்பாட்டக்காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த இடங்களை விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும் என்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும் என்றும் ராணுவம் முன்னதாக அறிவித்திருந்தது.


இதற்கிடையில் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் அபிசித்திற்கு நெருக்குதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. திடீர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களின் நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்று அபிசித் கூறியுள்ளார்.


இந்நிலையில் 43 நாடுகள், பேங்காக் செல்ல திட்டமிட்டுள்ள தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு பயண எச்சரிக்கை செய்துள்ளன.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]