இந்தியரால் வாங்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி தனது வணிகத்தை ஆரம்பித்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 15, 2010


இந்தியத் தொழிலதிபர் ஒருவரால் விலைக்கு வாங்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி சனிக்கிழமை அன்று லண்டனில் தனது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது.


135 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளிலேயே இக்கம்பனி கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தனது வெற்றியின் உச்சக்கட்டத்தில் இருந்த போது இந்நிறுவனம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை தனது சொந்தப் பாதுகாப்புப் படையுடன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. 1857 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் சிப்பாய்கள் கம்பனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதை அடுத்து இந்நிறுவனம் கலைக்கப்பட்டது.


1874 இல் இந்நிறுவனம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது. இதனைத் தற்போது லண்டனில் உள்ள சஞ்சீவ் மேத்தா என்ற இந்திய தொழிலதிபர் ஒருவர் 2005 ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கியுள்ளார். சொகுசு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை அவர் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கிறார். The East India Company Fine Food Limited என்பது இந்நிறுவனத்தின் பெயர்.


”இது வெறுமனே வர்த்தக முயற்சியல்ல, இதில் உணர்வு சார் தொடர்புகள் பொதிந்துள்ளன,” என சஞ்சீவ் மேத்தா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்த மேத்தா (அகவை 48), மில்லியன் மக்களுக்குப் பழக்கமான 400 ஆண்டுகள் பழமையான பெயர் ஒன்றைத் தாம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.


1600 டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனி தனது வர்த்தகத்தைத் தொடங்க இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்தார். தற்போதைய தெற்காசிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.


இதனையடுத்து இந்தியாவிலும், சீனாவிலும் கால் பதித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. படிப்படியாக அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைக் கைப்பற்றி அப்படியே நாட்டையும் கைப்பற்றி விட்டது பிரித்தானிய அரசு.


1874ம் ஆண்டு ஜனவரி 1 இல் இங்கிலாந்து அரசு கம்பெனியை கலைத்து அனைத்து அதிகாரங்களையும் இங்கிலாந்து ராணிக்கு மாற்றியது. அதன் பின்னர் அந்த நிறுவனம் முடங்கிப் போனது.


லண்டனில் உள்ள மேத்தாவின் நிறூவனத்தில் 350 வகையான சொகுசு உணவுப் பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்