உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 22, 2012

இலங்கையில் 2009 இறுதிப் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஜெனீவாவில் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இன்று 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.


இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐநா மனித உரிமைப் பேரவையில் முன்வைத்துள்ளதாகவும் இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்த வைப்பதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.


போர் முடிந்து இலங்கை தனது வழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் இருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா பிரேரணையை முன்வைத்து தெரிவித்துள்ளது.


47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய நாடுகள், இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றும் வாதிட்டன.


இந்தியா, சிலி, கொஸ்தா ரிக்கா, குவாத்தமாலா, மெக்சிக்கோ, பெரு, உருகுவே, ஆத்திரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கிரேக்கம், அங்கேரி, போலந்து, மோல்டோவா, ருமேனியா, பெனின், கெமரூன், லிபியா, மொரிசியஸ், மற்றும் நைஜீரியா ஆகியன அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்தன.


அமெரிக்காவின் பிரேணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்: கொங்கோ, மவுரித்தேனியா, உகாண்டா, வங்காளதேசம், சீனா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, எக்குவடோர், உருசியா.


அங்கோலா, பொட்சுவானா, புர்கினா பாசோ, ஜிபூட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா ஆகியன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]