உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் 'புரோட்டோன்-எம்' ஆளில்லா ஏவூர்தி கசக்ஸ்தானில் வீழ்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 2, 2013

கசக்ஸ்தானில் உள்ள உருசியாவின் பைக்கனூர் வானூர்தி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட புரோட்டோன்-எம் என்ற ஏவூர்தி (rocket) புறப்பட்டு சில வினாடிகளில் வீழ்ந்து வெடித்தது.


பைக்கனூர் ஏவுதளத்தில் புரோட்டோன்-எம் ஏவூர்தி

ஏவூர்தி வெடிக்க முன்னர் பல துண்டுகளாகச் சிதறிய நிகழ்வை உருசியத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. ஏறத்தாழ 600 தொன் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஏவூர்தி வீழ்ந்த இடத்தில் கடுமையான புகை மண்டலம் காணப்பட்டது. அங்குள்ளோரை தற்காலிகமாக வெளியேற்றும் நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


உருசியாவின் குளோநாசு என அழைக்கப்படும் புவியிடங்காட்டிக்கான மூன்று செயற்கைக்கோள்களை இந்த ஏவூர்தி காவிச் சென்றது.


எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. புரோட்டோன் எம் ஏவூர்தி 2006 ஆம் ஆண்டிலும் இவ்வாறு வீழ்ந்து வெடித்தது. 2010 ஆம் ஆண்டில் உருசியா ஏவிய மூன்று துணைக்கோள்கள் புவிச்சுற்றுப்பாதையில் செல்ல முடியாமல் வீழ்ந்தன. இதே போன்று 2011 ஆகத்து மாதத்தில் உருசியா ஏவிய புரோகிரஸ் விண்கலம் ஏவிய சிறிது நேரத்தில் வீழ்ந்து வெடித்தது.


சூலை 27 இல் ஏவப்படவிருந்த புரோகிரஸ் -20எம் விண்கலத்தின் பயணம் இன்றைய விபத்தை அடுத்து தள்ளிப்போடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்

[தொகு]