உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் தற்பாலின தடைச் சட்டத்தைக் கண்டித்த கூகிள் முகப்புப் படம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 8, 2014

உருசியாவின் சோச்சி நகரில் 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இதனைப் பயன்படுத்தி கூகிள் நிறுவனம் தனது முகப்பில் தற்பாலினத்தோருக்கு ஆதரவாக வரைபடத்தை வெளியிட்டுள்ளது.


அண்மைய காலங்களில் உருசியாவில் தற்பாலினத்தோருக்கு எதிரான தடைச்சட்டங்களும், அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக பழமைவாத கிறித்தவப் பிரிவைச் சேர்ந்த உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் தற்பாலினத்தோருக்கு எதிராக சில சட்டமூலங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். இதனால் சோச்சி நகரில் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் தற்பாலின விளையாட்டு வீரர்கள் சுதந்திரமாக பங்கேற்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.


இதனை அடுத்தே உருசியாவிற்கும், தற்பாலின உரிமைகளைப் பாதுகாக்க தவறிய ஒலிம்பிக் நிர்வாகத்துக்கும் தமது எதிர்ப்பை காட்டும் முகமாக கூகிள் நிறுவனம் தற்பாலின சமூகத்தை அடையாளப்படுத்தும் ஆறு வண்ணங்களைக் கொண்ட வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் கூகிள் நிறுவனம் இதுவரை அளிக்கவில்லை.


மூலம்[தொகு]