உள்ளடக்கத்துக்குச் செல்

கம்போடியாவின் பிரியா விகார் கோயிலில் இருந்து வெளியேறுமாறு இராணுவத்தினருக்கு ஐநா பணிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 18, 2011

கம்போடிய - தாய்லாந்து எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பிரியா விகார் கோயிலில் நிலைகொண்டுள்ள கம்போடிய, தாய்லாந்து இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேறுமாறு ஐக்கிய நாடுகளின் உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பணித்துள்ளது. அங்கு அமைதி நிலவுவதை ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் கவனித்து வருவர் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பிரியா விகார் கோயிலின் அமைவிடம்

இவ்வாண்டு ஆரம்பத்தில் பிரியா விகார் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டதை அடுத்து கம்போடியா பன்னாட்டு நீதிமன்றத்துக்கு முறையிட்டது.


இக்கோவில் கம்போடியாவுக்குச் சொந்தமாக இருந்தாலும், இதனைச் சுற்றியுள்ள பெருமளவு இடம் தாய்லாந்தில் உள்ளது. நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக முறுகல் நிலை இருந்து வந்துள்ளது.


நீதிமன்றத்தின் இன்றைய முடிவு இவ்வழக்கு விசாரணைகளின் முதல் கட்டமே என்றும், இவ்வழக்கு முடிவடைய மிக நீண்ட காலம் பிடிக்கும் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


1962 ஆம் ஆண்டில் பன்னாட்டு நீதிமன்றம் இக்கோயிலின் உரிமைகளி கம்போடியாவுக்கு அளித்திருந்தது. ஆனாலும், இத்தீர்ப்பு பல பிரச்சினைகளுக்குப் பதிலளிக்காமலே முடிவடைந்ததை அடுத்து கம்போடியா மேலதிக விளக்கத்தை நீதிமன்றத்திடம் கேட்டிருந்தது. தாய்லாந்து இவ்வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என விவாதித்தது.


2008 ஆம் ஆண்டில் இக்கோயில் பகுதிகள் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டதை அடுத்து கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையில் முறுகல் நிலை உருவானது. இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற சண்டையில் 10 பேர் உயிரிழந்தனர். ஏப்ரலில் மேலும் 18 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தாய்லாந்து இராணுவப் பேச்சாளர், "தமது இராணுவம் உடனடியாக சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் இருந்து வெளியேறாது," எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]