உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டுத்தீ காரணமாக மாஸ்கோவில் கடும் புகை மூட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 9, 2010

உருசியாவில் மத்திய, தென் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி, அனல் காற்று காரணமாக பல இடங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் தலைநகர் மாஸ்கோவில் தூசியுடன், பனியும் புகையும் சூழ்ந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


இதனால், இங்குள்ள மக்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. தொண்டை வலி, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினை போன்றவற்றுக்குப் பெரும்பாலானோர் ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.


ஒரு நூற்றாண்டில் வரலாறு காணாத கடும் வெப்பம் அங்கு நிலவுவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மாஸ்கோவில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வீடுகளிலேயே தங்கியிருப்பது நல்லது என்றும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மத்திய ரஷ்யாவில் இன்னும் 557 இடங்கள் எரிவதாகவும், 174,000 எக்டயர் பரப்பளவு தீயில் எரிந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தாக்கம் அருகில் உள்ள பின்லாந்து வரை உணரக்கூடியதாக உள்ளது. காட்டுத் தீக்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.


ரஷ்யாவில் வீசும் அனல் காற்றின் வேகம் இன்று திங்கட்கிழமை வரை தணியவில்லை என்றும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]