சூடானின் தார்ஃபூர் போராளிக் குழுத் தலைவர் இப்ராகிம் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 26, 2011

நீதி மற்றும் சமத்துவ இயக்கம் (ஜெம்) என்ற தார்பூரின் முக்கிய போராளிக் குழுவின் தலைவர் வான் தாக்குதல் ஒன்றின் போது கொல்லப்பட்டதாக அவ்வியக்கம் அறிவித்துள்ளது.


சூடானில் தார்ஃபூர் பிரதேசம்

இயக்கப் பேச்சாளர் கிப்ரில் ஆடம் பிலால் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற வியாழக்கிழமை காலை 03:00 மணியளவில் ஏவுகணை ஒன்று தமது முகாம் மீது வீழ்ந்து வெடித்ததில் கலீல் இப்ராகிம், மற்றும் அவரது மெய்க்காப்பாளர் ஆகியார் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார். உளவு விமானம் ஒன்றில் இருந்தே ஏவுகணை வீசப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, வடக்கு கொர்டோஃபான் பகுதியில் வாட் பண்டா என்ற நகரில் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் இப்ராகிம் கொல்லப்பட்டதாக சூடானிய இராணுவம் நேற்று அறிவித்திருந்தது.


கலீல் இப்ராகிம் அண்மையில் விடுதலை அடைந்த தெற்கு சூடானுக்குள் தப்பிச் செல்லுவதற்கு முயற்சி செய்தார் என இயக்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். தமது தலைவர் இறந்தாலும், தார்பூரைத் தாம் எவ்வகையிலும் மீட்போம் என ஜெம் இயக்கம் தெரிவித்துள்ளது.


ஜெம் இயக்கத்தை கலீல் இப்ராகிம் ஆரம்பித்து பெரும் சக்தி வாய்ந்த போராளிக் குழுவாக மாற்றியிருந்தார். லிபியாவில் தங்கியிருந்த இப்ராகிம் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து இவ்வாண்டில் தார்ஃபூர் திரும்பி இருந்தார். லிபிய எழுச்சியின் போது இப்ராகிமின் படையினர் கடாபியின் ஆதரவாளர்களுடன் இணைந்து போரிட்டு வந்ததாக சூடானிய அரசு குற்றம் சாட்டி வந்தது.


201 பெப்ரவரியில் ஜெம் இயக்கம் சூடானிய அரசுடன் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்திருந்தது. ஆனாலும், தார்பூர் மீது இராணுவம் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருவதாகக் கூறி போர்நிறுத்த இடன்பாட்டில் இருந்து சில மாதங்களில் விலகிக் கொண்டனர்.


கடந்த எட்டு ஆண்டுகளாக இப்பகுதியில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் 2.7 மில்லியன் மக்கள் வரையில் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]