பெருவின் கம்யூனிசப் போராளிக் குழு தோல்வியை ஒப்புக் கொண்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 8, 2011

இலத்தீன் அமெரிக்க நாடான பெருவின் ஒளிர்தடவழி (Shining Path) என்ற போராளிக் குழு தோல்வியடைந்துள்ளதாக அக்குழுவின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


பெருவில் கம்யூனிச இயக்கத்தின் செல்வாக்குள்ள பகுதிகள்

தமது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுடன் பேச்சுக்கு வரத் தாம் தயாரென வடக்குப் பெருவில் இவ்வியக்கத்துக்குத் தலைமை தாங்கும் தோழர் ஆர்ட்டேமியோ கூறியுள்ளார். அவ்வியக்கத்தின் ஏனைய போராளிகளும் ஆயுதங்களைக் கைவிடத் தயாரா என்பது இதுவரையில் அறியப்படவில்லை.


1980களிலும் 1990களின் ஆரம்ப காலத்திலும் ஷைனிங் பாத் என்ற இந்த இயக்கம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த போது இடம்பெற்ற மோதல்களில் கிட்டத்தட்ட 70,000 பேர் வரையில் இறந்துள்லதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


பெருவின் பூர்ஷுவா மக்களாட்சி எனத் தாம் கருதிய அப்போதைய அரசை ஒழிக்கவென 1980 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாவோயிச வழியில் கம்யூனிச அரசை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 1992 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அபிமாயெல் குஸ்மன் கைது செய்யப்பட்டமை, மற்றும் பெருவின் அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் தீவிரவாதத்துக்கெதிரான கடுமையான தாக்குதல்கள் போன்ற காரணங்களினால் இவ்வியக்கம் பலவீனமடைந்தது.


பெருவின் சில பகுதிகளில் எஞ்சியுள்ள சில போராளிகளுடன் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மோதல்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.


மூலம்[தொகு]