உள்ளடக்கத்துக்குச் செல்

மச்சு பிக்ச்சு தொல்பொருட்களை யேல் பல்கலைக்கழகம் திரும்ப ஒப்படைக்கும்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 22, 2010

வரலாற்றுச் சிறப்பு மிக்க மச்சு பிக்ச்சு நகரில் இருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் எடுத்துச் சென்ற ஆயிரத்திற்கும் அதிகமான தொல்பொருட்களை ஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் திருப்ப ஒப்படைக்க உறுதி தந்துள்ளதாக பெருவின் அரசுத்தலைவர் கூறியுள்ளார்.


மச்சு பிக்ச்சு

15 ஆம் நூற்றாண்டு இன்கா பேரரசின் எச்சங்கள் தொடர்பாக கடந்த ஏழு ஆண்டுகளாக பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.


1911 ஆம் ஆண்டில் இந்த தொல்பொருட்கள் கடனாக யேல் பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்கப்பட்டது என பெரு கூறி வருகிறது. 2008 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்துக்கு எதிராக அது வழக்குப் பதிவு செய்திருந்தது.


பெரு அரசுத்தலைவர் அலன் காசியாவும் அவரது அரசும் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த தீவிரப் பிரச்சாரத்தின் பின்னர் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பிரச்சினை குறித்து அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவுடனும் பெர் தலைவர் கதைத்திருந்தார்.


1911 ஆம் ஆண்டில் யேல் ஆய்வாளர் இராம் பிங்கம் என்பவர் மச்சு பிக்ச்சுவை அதிகாரபூர்வமாகக் கண்டுபிடித்ததன் பின்னர் அவர் அங்கிருந்த இருந்த பல தொல்பொருட்களை கடனாகப் பெற்றுச் சென்றிருந்தார் என பெரு கூறி வருகிறது. ஆனால் தமக்குக் கொடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மிகவும் குறைவானவை என்றும் அவற்றில் 330 மட்டுமே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தக்கூடியவை என்றும் யேல் பல்கலைக்கழகம் கூறி வருகிறது. ஏனையவற்றை 80 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பக் கையளிக்கப்பட்டு விட்டது என்றும் அது கூறுகிறது.


மச்சு பிக்ச்சு கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டுகள் கழியும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இவை மீண்டும் பெருவிடம் கையளிக்கப்படவிருக்கிறது.


இம்மாத ஆரம்பத்தில் நியூயோர்க் நகர அருங்காட்சியகம் ஒன்று பண்டைய எகிப்திய மன்னன் துட்டன்காமனின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட 19 தொல்பொருட்களை எகிப்திய அரசுக்குத் திருப்பிக் கொடுத்திருந்தது.


மூலம்

[தொகு]