சைபீரியாவில் உருசிய விமானம் விபத்துக்குள்ளாகியதில் 31 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 2, 2012

மேற்கு சைப்பிரியாவில் தியூமென் நகரில் இன்று அவசரமாகத் தரையிறங்க முற்பட்ட உருசிய பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விமானப் பணியாளர்கள் அனைவரும் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


யூட் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏடிஆர்-72 விமானம் 4 விமானிகளுடனும் 39 பயணிகளுடனும் சுர்குட் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் சிறுவர்கள் எவரும் இருக்கவில்லை.


விமானம் தரையிறங்கும் போது விமானத்தில் இரண்டு இயந்திரங்களிலும் இருந்து புகை கிளம்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஏடிஆர்-72 என்ற இந்த விமானம் பிரெஞ்சு-இத்தாலியத் தயாரிப்பாகும்.


விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. ஆனாலும், விமானத் தகவல் சேமிப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்வதற்காக அதிகாரிகள் தலைநகர் மாஸ்கோவில் இருந்து சைபீரியாவுக்கு விரைந்துள்ளனர்.


கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் இதே விமான நிலையத்தில் ஜெட் விமானம் 124 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததில் மூவர் உயிரிழந்தனர். செப்டம்பரில் இடம்பெற்ற விபத்தில் லோக்கோமோட்டிவ் யாரொசுலாவ் ஹாக்கி அணியின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் இறந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]