உள்ளடக்கத்துக்குச் செல்

பெருவின் கம்யூனிசப் போராளிக் குழுத் தலைவர் கைது செய்யப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 13, 2012

பெருவின் ஒளிர்தடவழி (Shining Path) என்ற முன்னாள் கம்யூனிசப் போராளிக்குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டார். தோழர் ஆர்ட்டேமியோ என அழைக்கப்படும் இவர் காட்டுப் பகுதி ஒன்றில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் கைப்பற்றப்பட்டார் என பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.


1980களிலும் 90களின் ஆரம்பத்திலும் மிகப் பலம் வாய்ந்த கெரில்லா இயக்கமாக இருந்தது இந்த ஒளிர்தட வழி இயக்கம். சுமார் 70,000 பேர் வரையில் இக்காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். தமது போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தாம் தயார் என ஆர்ட்டேமியோ கடந்த ஆண்டு திசம்பரில் அறிவித்திருந்தார். இக்குழு இப்போது பெரும்பாலும் போதைப் பொருள் கடத்தலிலேயே ஈடுபட்டுள்ளது.


ஆர்டேமியோ கைது செய்யப்பட்டதன் மூலம் கொக்கெயின் அதிகம் விளையும் ஆல்ட்டோ உவால்லாகா பள்ளத்தாக்கு நமது முழுமையான கட்டுப்பாட்டில் வந்துள்ளது என பெருவின் அரசுத்தலைவர் ஒலாண்டா உமாலா கூறினார். இப்போது எனி-அப்புரிமாக் பள்ளத்தாக்கில் நிலைகொண்டுள்ள ஏனைய போராளிகளுக்கு எதிராக நாம் தாக்குதல்நடத்தவிருக்கிறோம் என அவர் மேலும் கூறினார்.


ஆர்ட்டேமியோ இறந்து விட்டதாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவித்திருந்தாலும், அவர் கடுமையான காயங்களுடன் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது வலது கையை முற்றிலுமாக இழந்துள்ளார். அவருக்கு தற்போது தலைநகர் லீமாவில் மருத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பெருவின் பூர்சுவா மக்களாட்சி எனத் தாம் கருதிய அப்போதைய அரசை ஒழிக்கவென 1980 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாவோயிச வழியில் கம்யூனிச அரசை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 1992 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அபிமாயெல் குஸ்மன் கைது செய்யப்பட்டமை, மற்றும் பெருவின் அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் தீவிரவாதத்துக்கெதிரான கடுமையான தாக்குதல்கள் போன்ற காரணங்களினால் இவ்வியக்கம் பலவீனமடைந்தது.


தொடர்புள்ள செய்தி

[தொகு]

மூலம்

[தொகு]